பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், சீர்திருத்தங்களை அமல் படுத்துவதிலும் புல்லட் ரயில் வேகத்தில் செயல்படுவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே புகழ்ந்துள்ளார்.
ஷின்சோ அபே, மூன்று நாள் அரசுமுறை பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தியா, ஜப்பான் நாட்டின் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, "இந்தியா தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் கவர்ச்சிகரமான நாடாக திகழ்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், சீர்திருத்தங்களை அமல் படுத்துவதிலும் புல்லட் ரயில் வேகத்தில் செயல்படுகிறார். அதே வேளையில் அவருடைய சீர்திருத்த நடவடிக்கைகள் பாதுகாப்பானவையாகவும் உள்ளது" என்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும்கூட இந்தியாவும், ஜப்பானும் பொருளாதார பின்னடைவை சந்திக்கவில்லை. இந்திய, ஜப்பானிய பொருளாதாரம் வலுவாக உள்ளன.
அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவதில் மட்டும் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதாது வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்வதிலும் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஜப்பானில் தற்போது மேக் இன் இந்தியா திட்டம் பின்பற்றப்படுகிறது. இதற்காக 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முதல் முறையாக ஜப்பான் இந்தியாவில் இருந்து கார்களை இறக்குமதி செய்யும். மாருதி (சுசூகி) நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து அதை ஜப்பானுக்கு ஏற்றுமது செய்யும். இது, இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடைய ஒரு சான்று" என்றார்.
இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
0 comments:
Post a Comment