வெகுஜன சினிமாவில் பெரும்பாலும் கேளிக்கையின் கையே ஓங்கிவிடுகிறது.
பொழுதுபோக்கை மட்டுமே முதன்மைப் படுத்தும் படங்களில் மனித உணர்ச்சிகள்
விளையாட்டுப் பொருட்களாக மாறிவிடு கின்றன. அப்படிப்பட்ட சினிமாவில்
விளையாட்டையே சுவாசமாய் கொண்ட கதாபாத்திரங்கள் வந்துபோவது அபூர்வம்தான்.
மவுனப்படம் தொடங்கி நூறாண்டுகளை நிறைவு செய்திருக்கும் தமிழ் சினிமாவில்
விளையாட்டையே கதையின் மையப்பொருளாக்கிய படங்கள் 20ஐக் கூட எட்டவில்லை.
அவற்றில் சிறந்த 10 படங்களை வரிசைப்படுத்தலாம் வாருங்கள்.
10 போட்டா போட்டி
கிரிக்கெட் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கிராமம் ஒன்றில் பிரபல
கிரிக்கெட் வீரர் சிக்கிக்கொள்ளும் நகைச்சுவை ஆடுகளம் இந்தப் படம். ஊர்த்
தலைவரின் மகளை மணந்துகொள்ளத் துடிக்கும் இரண்டு முறைப் பையன்கள்.
கிரிக்கெட் போட்டியில் ஜெயித்தால்தான் பெண் என்று தலைவர் கறாராகச்
சொல்லிவிடுகிறார். ஒரு அணிக்கு உதவ முன்வருகிறார் நாயகன் சடகோபன் ரமேஷ்.
அதேநேரம் அந்த ஊரின் கிரானைட் மலையை அபகரிக்க முயல்கிறது ஒரு கும்பல்.
காதலில் ரன் குவித்து, வில்லன்களை நாயகன் எப்படிப் பந்தாடினார் என்பதே கதை!
படத்தின் இயக்குநர் யுவ்ராஜ்.
9 லீ
கடும் உழைப்பைத் தந்து வெற்றியின் விளிம்புவரை செல்லும் கால்பந்தாட்ட
விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் அரசியல் விளையாடினால்? அதுதான்
பிரபுசாலமன் இயக்கிய ‘லீ ’. கால்பந்தாட்டத்தைக் கனவாய் நேசிக்கும் சிபியின்
தலைமையிலான அணிக்குப் பயிற்சி தருகிறார் நேர்மையும் கடுமையும் கொண்ட
பிரகாஷ்ராஜ். ஆனால் விளையாட்டுத் துறையைக் கையில் வைத்திருக்கும்
அமைச்சரின் தனிப்பட்ட ஈகோவால் அந்த அணியின் கனவு கலைகிறது. கால் பந்து
மைதானம் தலைகள் உருளும் கமர்ஷியல் பழிவாங்கும் போர்க் களமாக மாறுகிறது.
8 வெண்ணிலா கபடிக்குழு
என்னதான் கிரிக்கெட் ஆக்கிரமித்துக்கொண்டாலும் இன்னமும் தமிழ்க்
கிராமங்களில் கபடி மீது காதலாகத் திரியும் இளைஞர்கள் அந்த ஆட்டத்தின் மீது
ஆர்ப்பாட்டமான காதலை வைத்திருக்கிறார்கள் என்பதை ஒரு மெல்லிய காதலுடன்
சொன்ன கதை. விடிந்தால் கபடி, விழுந்தால் கபடி என்று சின்சியராக ஆட்டம்
போடும் கணக்கன்பட்டி என்ற தமிழ்க் கிராமத்து இளைஞர்களின் குழு ஒன்று பெரிய
போட்டியில் கலந்து கொள்ள மதுரை செல்கிறது. அங்கே இவர்களுக்கு ஏற்படுகிற
அனுபவங்களும், அதிர்ச்சிகளும்தான் படம். இயக்குநர் சுசீந்திரன், நடிகர்
விஷ்ணுவிஷால் ஆகியோரின் அறிமுகப்படம்.
7 வல்லினம்
விளையாட்டையும் நட்பையும் கொண்டாடிய படம். கிரிக்கெட் மற்ற
விளையாட்டுகள்மீதான ஆர்வத்தை மழுங்கடிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச்
சொன்னார் இயக்குநர் அறிவழகன். கூடைப்பந்து வீரரான நகுலன் ஒரு போட்டியில்
தூக்கிப்போடும் பந்து தன் உயிர் நண்பன் கிருஷ்ணாவின் உயிரைப்
பறித்துவிடுகிறது. அந்த விபத்துக்குப் பிறகு விளையாட்டையே தன் மனதிலிருந்து
வீசியெறிந்தவன் மீண்டும் அதே நட்புக்காகக் கையிலெடுக்கிறான். அவன்
தொட்டதால் கூடைப்பந்துக்கு வெளிச்சம் கிடைக்கிறது. வல்லினமாக வலம் வரும்
கிரிக்கெட் வாலைச் சுருட்டுகிறது. கூடைப்பந்து விளையாட்டை ஹாலிவுட்
படங்களுக்கு இணையாகப் படமாக்கிக் காட்டிய படம்.
6 பூலோகம்
குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் நெஞ்சுறுதியும் புஜபலமும்
கொண்ட நாயகன், தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை
உணர்ந்து தனது பழிவாங்கும் உணர்வைக் கைவிடும் கதையே ‘பூலோகம்’. நட்சத்திரத்
தேர்வும், கூர்மையான வசனங்களும் படத்தைத் தூக்கி நிறுத்திய அம்சங்கள்.
விளையாட்டு வீரர்களுக்கும் சொற்ப சன்மானத்தைக் கொடுத்துவிட்டுக்
கோடிக்கணக்கில் பணம் பண்ணும் சில விளையாட்டுத் தொலைக்காட்சிகளின்
மனசாட்சியை அறிமுக இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கேள்வி கேட்ட விதம் அபாரம்.
இயக்குநரும் படத்தொகுப் பாளரும் மனமிறங்கி படத்தின் நீளத்தைக்
குறைத்திருந்தால் ஒவ்வொரு பன்ச்சும் நச்சென்று இருந்திருக்கும்.
5 சென்னை 600028
சென்னை மாநகர நடுத்தரக் குடும்பத்து இளைஞர்களின் உலகை யதார்த்தமும்
கொண்டாட்டமுமாகச் சொல்ல, கிரிக்கெட் மைதானத்தைக் களமாகப்
பயன்படுத்திக்காட்டினார் இயக்குநர் வெங்கட்பிரபு. எதிரும் புதிருமான இரண்டு
‘ஏரியா’ கிரிக்கெட் அணிகள். ஒரு அணியின் அங்கம் வகிக்கும் ஜெய்யின்
குடும்பம், எதிரணியின் ஏரியாவில் குடியேறுகிறது. உரசலும் நட்பும் மாறி
மாறித் தீப்பிடிக்கும் இந்தக் கதையில் காதலும் களம் காண்கிறது.
4 எதிர்நீச்சல்
கதையின் நாயகன் ஒரு சாதாரண இளைஞன். பெற்றோர் தனக்கு வைத்த பெயரால்
தாழ்வுமனப்பான்மையால் தவிப்பவன். பெயரை மாற்றிக்கொண்டு மனதுக்குப் பிடித்த
பெண்ணிடம் காதலைச் சொல்கிறான். அவளும் காதலை ஏற்கிறாள். பெயர் மாற்றிய
விவரம் கசிந்து காதலில் ஏற்படும் விரிசலை அவனிடமிருக்கும் ஓட்டத்திறமை
ஒட்டுப்போட்டு அடைக்கிறது. அடிப்படையில் நாயகனின் கதையாக இருந்தாலும்
அவனுக்குப் பயிற்சியளிக்க வரும் இரண்டாம் நாயகி முதன்மை நாயகியாக மாறும்
திரைக்கதையின் விறு விறு ஓட்டம்தான் படத்தில் நிஜ மாரத்தான். துரை
செந்தில்குமார் இயக்கத்தில் சிரிக்கவைத்து தன்னம்பிக்கையை ருசிக்க வைத்த
படம்.
3 ஈட்டி
உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும்
அரிதான பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான்
‘ஈட்டி’. நாயகனுக்கு இருக்கும் ரத்த உறைவின்மை நோய் பற்றிய விளக்கத்தோடு
தொடங்கும் படத்தில் குற்றப் பின்னணிக் கதையொன்றைக் கட்சிதமாக இணைத்து
காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் ரசிக்க வைத்தார் அறிமுக இயக்குநர் ரவி.
ஒரு தடை ஓட்ட வீரன் எடுத்துக்கொள்ளும் பயிற்சி, முயற்சி ஆகியவை திரைக்கதை
ஓட்டத்திலிருந்து சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
2 ஜீவா
விளையாட்டிலும் விளையாட்டுச் சங்கங்களிலும் நடக்கும் உள்குத்து, ஓரவஞ்சனை,
ஜாதி அரசியல் ஆகியவற்றால் கருகும் மற்றொரு கிரிக்கெட் கனவுதான் ஜீவா.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கப் போராடும் கதையின் நாயகனை
விக்கெட்டை வீழ்த்தத்துடிக்கிறது கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியின் சாதி
அரசியல். அதற்கு ஏற்கெனவே பலியான நண்பனின் இழப்பை மீறி நாயகன் வென்றாரா
இல்லையா என்பதை விளையாட்டில் நுழைந்து விட்ட சாதி அரசியலைத் துணிச்சலாகச்
சாடிச் சொன்ன படம்.
1 இறுதிச்சுற்று
ஓர் ஏழை மீனவப் பெண்ணிடம் இருக்கும் திறமையைக் கண்டறியும் ஒரு நேர்மையான
பயிற்சியாளர் அதை உலகறியச் செய்ய நடத்தும் உணர்வுபூர்வ போராட்டம்தான்
‘இறுதி சுற்று’. குத்துச் சண்டை வழியே பெண்களின் முன்னேற்றத்தை அழுத்தமாக
வலியுறுத்தும் படம். இதைவிடவும் பொருத்தமான நட்சத்திர தேர்வு இருக்க
முடியாது எனும் அளவுக்கு நிஜகுத்துச் சண்டை வீராங்கனையை நாயகியாகத் தேர்வு
செய்ததும் கதாபாத்திரங்களை மிகையின்றி வார்த்த விதமும் ஒரு பெண்
இயக்குநரின் முனைப்பையும் முயற்சியைம் முழுமையாக வெளிப்பட்டு நின்ற படமாக
வெற்றிபெற்றிருக்கிறது இறுதிச் சுற்று.
Thank U. Hindu News
0 comments:
Post a Comment