மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான இவர் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார்.
அப்போது, மீட்பு பணியிலிருந்த இந்திய விமானப்படையின் 'சீட்டா' என்ற ஹெலிகாப்டர் மூலம் டிசம்பர் 2-ம் தேதி மீட்கப்பட்ட தீப்தி முதலில் தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் அவரது மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
இதையடுத்து அவர் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போரூர் ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் கணினியில் இருந்த ஆவணங்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரு நாட்களுக்குப் பிறகு கடந்த நான்காம் தேதி அவருக்கு நடந்த பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
விமானப்படையினரால் தீப்தி மீட்கப்பட்டபோது அவரது கணவர் கார்த்திக், பணி நிமித்தமாக பெங்களூரூ சென்றிருந்தார்.
இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியை தற்போது நிருபர்களுடன் பகிர்ந்துகொண்ட கார்த்திக், எங்களுக்கு பிறந்துள்ள இரட்டை தேவதைகளை கண்ட போது, எங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் மறந்துவிட்டோம். இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவருக்கும் உரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
|
Congrats. For Your Social interest.all the best for your future achievements.be confident your self.
ReplyDelete