ஆசிய கோப்பை மற்றும் உலக டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில், ரகானே, மணீஷ் பாண்டே இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிய கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் வரும் 24ம் தேதியும், ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 15ம் தேதியும் தொடங்க உள்ளன. இவ்விரு தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு டெல்லியில் இன்று நடக்க உள்ளது.
பேட்டிங்கை பொறுத்த வரையில் டோனி, ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், கோஹ்லி, ரெய்னா ஆகியோர் தேர்வு செய்யப்படுவது உறுதியே. ஆல்ரவுண்டர் என்ற வகையில் யுவராஜ் சிங்குக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 7வது பேட்ஸ்மேனாக ரகானேவா, மணீஷ் பாண்டேவா என்பதில் தான் போட்டி இருக்கிறது. ரகானே சிறந்த ஆட்டக்காரர் என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மணீஷ் பாண்டே சதம் அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்ததுடன், தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆவதை தடுத்தார்.
இதனால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள மணீஷ் பாண்டேவா, ரகானேவா என்பதில் தேர்வுக்குழுவுக்குள் பெரிய விவாதம் ஏற்படும். பந்துவீச்சை பொறுத்த வரையில், சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின், ஜடேஜா, ஹர்பஜனும், வேகப்பந்து வீச்சில் காயம் குணமடைந்து திரும்பியுள்ள மோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், நெஹ்ரா ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

0 comments:
Post a Comment