Recent


கிக் பாக்சிங் கோச்சர் மாதவன்! பாலிடிக்ஸ் காரணமாக சென்னைக்கு மாற்றப்படும் அவர், இங்கிருந்து ஒரு கிக் பாக்சரை இந்திய சாம்பியனாக உருவாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். வந்த இடத்தில் இவர் கண்ணில் படுகிற குரோட்டன்ஸ்தான் ஹீரோயின் ரித்திகாசிங். வடசென்னையில் மீன் விற்கும் ஹீரோயினுக்கு தன் அக்காவை எப்படியாவது கிக் பாக்சர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. துணைக்கு வருகிற இவளிடம் இருக்கிற திறமையை கண்டுபிடிக்கிற மாதவன், அவளை எப்படி சாம்பியனாக்கி இந்தியாவுக்காக தங்கம் வாங்க வைக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். இந்த ரெண்டு வரிக் கதைக்குள் காதல், கோபம், ஆக்ஷன், துரோகம், இயலாமை, வெறுப்பு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் பாலிடிக்ஸ் என்று எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு ஆவி பறக்க விஷயங்களை சொல்லியிருக்கிறார் சுதா. தமிழ்சினிமா இதற்கு முன் பார்த்த களம்தான். ஆனால் வேறொரு அழகுடன்!

லேட்டாக வந்தாலும் ‘ஹாட்’டாக வந்திருக்கிறார் மாதவன். வாயை திறந்தால் அலட்சியம், அதனூடே தெறிக்கும் கெட்ட வார்த்தைகள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத வெற்றுப்பார்வை என மிரட்டியிருக்கிறார் மனுஷன். (இனிமேலும் அவரை சாக்லெட் பாய்னு சொல்லுவீங்க?) “யோவ் கிழவா, தொப்பை வெளியே தெரியுது பாரு…” என்று ஹீரோயின் அடிக்கிற கிண்டலையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஒரு லுக் விடுகிறாரே…அங்கே கவிழ்வார்கள் ரசிகைகள். ஒரு இடத்தில் கூட தன் கம்பீரத்தை விட்டுக் கொடுக்காத அவரது திமிருக்கு தியேட்டரே சரணாகதியாகிறது. எதுக்கு அங்கே இங்கே அலையுறீங்க, இங்கேயே ஸ்டே பண்ணி, இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுங்க மாதவன்!

ஒரு திடீர் புயலாக நுழைந்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ரித்திகாசிங். நிஜத்திலும் இவர் கிக் பாக்சிங் சாம்பியன்தானாம். விழுகிற ஒவ்வொரு அடியிலும் அது தெரிகிறது. தன்னை ‘ட்ரை’ பண்ணுகிறார் மாஸ்டர் என்று நினைத்து அவரை முடிந்தளவுக்கு கேவலப்படுத்துகிற ரித்திகா சிங், பேசுகிற அநேக வார்த்தைகள் உவ்வே… சட்டுபுட்டென்று கோபம் தலைக்கேறி அம்பயரின் விலா எலும்பையே அடித்து நொறுக்குகிற போது ‘எங்கடா புடிச்சாங்க இந்த கோபக் கோழியை?’ என்ற திகைப்பே வந்துவிடுகிறது. சட் சட்டென முகத்தில் காட்டுகிற எக்ஸ்பிரஷன்களிலும் அசரடித்திருக்கிறார். அதுவும் அந்த கடைசிக் காட்சி…. உடம்பு சிலிர்க்காமல் ஒரு ரசிகனும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது.

உள்ளூர் கோச் நாசர். வெகு காலத்திற்கு பிறகு அப்படியே மனதில் குடி கொள்கிறார். யோவ்… கெட்டவன்யா நீ என்று மாதவனை விமர்சிப்பதும், அதற்கப்புறம் அதே மாதவனிடம் யோவ்… நல்லவன்யா நீ என்று பம்முவதுமாக அழகு சார் அழகூ…ஊ!

அதிகம் டயலாக்குகள் இல்லை. அவருக்காக காட்சிகளும் கம்மி. கைதட்டல் வாங்குகிறார் ராதாரவி. ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருக்கும் காளிக்கு பெரிய ரோல். வருகிற காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த காளியை வைத்துக் அல்லலோயாக்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் சுதா. ஆஹா… ஆஹா… ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருக்கும் மும்தாஜ் சார்க்கரும் நிஜத்தில் ஒரு கிக் பாக்சர்தானாம். சிறப்பாக நடித்திருக்கிறார்.

நீட்டி முழக்கி பேச வேண்டிய இடங்களில் கூட மிக நுணுக்கமாக வெளிப்பட்டு, ஊசியாக குத்திவிட்டு போகும் வசனங்கள் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு. அசர வைத்திருக்கிறார் வசனம் எழுதிய அருண் மாதேஸ்வரன்.

பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி. அப்படியே அள்ளிக் கொண்டு போகிறார் சந்தோஷ் நாராயணன். சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் மீனவக் குப்பம் கூட மின்னுகிறது. ஆனால் அதன் யதார்த்தம் கெடாமல். அப்புறம் அந்த டோன் தனி அழகு!

வெறும் காதலையும், பழி வாங்குதலையும் மட்டும் சொல்லிக் கூட கைதட்டல் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்குள் இந்திய விளையாட்டுத்துறையின் கிழிசலை லென்ஸ் வைத்து காண்பிக்க முயன்ற சுதாவின் அக்கறைக்கு ஒரு சபாஷ்.

இறுதியல்ல, இந்த படத்தில் பங்கு பெற்ற எல்லாருக்கும் இது ஒரு இனிய துவக்கம்!
4தமிழ்மீடியாவிற்காக - ஆர்.எஸ்.அந்தணன்



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment